கடந்த மார்ச் 28ஆம் தேதியன்று 'பெண்கள் சந்திப்பு' குழுவினர் ஒரு நாள் நிகழ்ச்சி ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார்கள். சென்னை பெசண்ட் நகர் "ஸ்பேசஸ்" அரங்கில் "திருமணம், உறவுகள், குடும்பம் - பெண்ணிய பார்வைகளும் புரிதல்களும்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டது பெருமகிழ்ச்சியளித்தது. அங்கு பேசியது, கேட்டது, சிந்தித்துக் கொண்டிருப்பது ஆகியவற்றின் பதிவுகளாய் கீழ்கண்டவையும் அவற்றின் தொடர்ச்சிகளும் இருக்கும்.
குடும்பம், நட்பு, மற்றும் இதர வகைகளிலான மனித உறவுகள் - இவை குறித்து பேசுவதற்கான வெளிகள் இன்று வெகுக் குறைவு என்றே தோன்றுகிறது. அதுவும் இச்சை, விழைவு, இன்பம், பாலியல் ஆகிய கூறுகளை உள்ளடக்கி உறவுகள், நட்பு, குடும்பம் ஆகியவற்றைப் பற்றி சிந்திப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகவே கிடைக்கின்றன. நம்முள் சிலர் இவை குறித்து சிந்திக்க முயல்கிறோம், இதற்குத் தேவையான மொழியைத் தேடியபடியே.
எனக்கு முன் பேசிய தோழி பிரேமா ரேவதி ரோஸா லக்சம்பர்க் தனது காதலருக்கு எழுதிய கடிதங்கள் சிலவற்றை வாசித்த பொழுது என்னுள் சில சிறிய வெளிச்சங்கள் தோன்றின. எண்ணங்களையும் உணர்வுகளையும் விவரமாக அசைபோடுவது போல் நீண்ட கடிதங்களாக எழுதி எத்தனை நாட்கள் ஆயிற்று என்று தோன்றியது. என் காதலர்(கள்) உடனான எனது எண்ணப் பகிர்தல்கள் சிறு சிறு துண்டுகளாய், பிட்-பைட் அளவுகளில், chat சன்னல்கள் அனுமதிக்கும் அளவுகளில், வாக்கியங்கள் கண்டபடி மடிக்கப்பட்டுப் போய்சேர்கின்றன. விழைவுகளின், இச்சைகளின் பரிமாற்றங்களும் கூட இப்பொழுது அப்படித்தானோ என்று தோன்றுகிறது. குறிப்பிட்ட அளவை மிஞ்சிவிட்டால் கைபேசியில் வரும் message களும் துண்டுகளாக வந்தும் போயும் சேர்கின்றன. உணர்வை அடிக்கோடிட எல்லாவருக்கும் ஒன்றாய் மஞ்சள் நிற முகபாவனைகள். Emoticons. இச்சை, விழைவு, காதல், காமம், உறவுகள் குறித்த எனது பகிர்தல்களும் திட்டுத் திட்டாய் உங்களை வந்தடையும் என்று நினைக்கிறேன்.
வந்தடையும் என்பதே ஒருவிதமான விழைவு, எதிர்பார்ப்பு, வேட்கை. பேசுவது கேட்கப்பட குரல் மட்டும் போதாது. நாம் பேசுவது போய் நிற்க ஒரு வெளி வேண்டும்; ஒரு கருத்துச் சூழல் வேண்டும். நம்மையும் நாம் பேசுவதையும் அடையாளம் கண்டுகொள்ள ஒரு கட்டமைப்பு வேண்டும். மொழியாலான ஒரு இடம். நாம் பேசப் பேச அந்த மொழி வெளி உருவாகிவிடும் என்று பலருக்கு நம்பிக்கை உண்டு. இது பற்றி எனக்கு சந்தேகங்கள் உண்டு. நீங்கள் தாராளமாகப் பேசலாம். ஆனால் கேட்கப்படுவது நீங்கள் பேசியதாக இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். பல வடிகட்டிகளும், சுருங்கச் சொல்லுதல்களும், தொகுத்து வழங்குதல்களும், மேற்கோள் துணுக்கெடுத்தலும் வழியில் உண்டு. இவற்றைத் தாண்டி நீங்கள் பேசியதாய்ப் போய் சேர்வதை அடையாளம் கண்டுகொள்வது சில சமயங்களில் போர்க்காலப் பிணங்களை அடையாளம் காணப் போவது போன்ற நிலை.
மாற்றுப் பாலியல் விழைவு, இச்சை, அடையாளம் என்ற தளத்தில் இருந்து பேசுகிறேன். நான் இவ்வளவு கூறியவுடனேயே பலர் என்னைப் 'புரிந்துகொண்டு' விடுவார்கள். அவர்கள் சிந்தனைச் சிதறல்களில் ஒரு Key Word search செய்தீர்களானால் இவையாக இருக்கும் - "ஓரினப்புணர்ச்சி," "இயற்கைக்குப் புறம்பான," "தில்லி உயர் நீதிமன்றம்," "மனித உரிமைகள்," "கலாச்சார சீரழிவு," "தனி மனித சுதந்திரம்," மேற்கத்திய நாகரிகம்," "எச் ஐ வி," "மனப் பிறழ்வு" - இம்மாதிரியாக. மாற்றுப் பாலியல் குறித்து பேச/ கேட்கப்பட இன்று இவையே வெளிகள். "ஒன்று மனித உரிமைகள் என்று பேசுங்கள் அல்லது எச் ஐ வி/ இதர பால்வினை நோய்கள் என்று பேசுங்கள். இச்சை, விழைவு, இன்பம் இதெல்லாம் எதிர்பால் நாட்டம் கொண்டோரே பேசுவதில்லை! நீங்கள் வேறு! உறவுகள் பற்றி நீங்கள் பேசினால் பொறுமையாகக் கேட்க ஒன்றிரெண்டு பேர் இருக்கிறோம். ஆனால் இருவர் உறவுகள்/ ஜோடிகள் பற்றி மட்டும் பேசுங்கள். புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பேசுவதைக் கேட்காவிட்டால் அது எங்கள் முற்போக்கு அரசியலைக் கேள்விக்குள்ளாக்குகிறது. அதனால் தான் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாங்கள் ஒன்றும் பாரபட்சம் பார்ப்பதில்லை. பெண்ணியத்திற்கும் இதே உபசரிப்பு தான்" என்பதே நாம் பேசிக் கொண்டிருக்கும் பொதுவெளி. இன்றைய இந்த நிகழ்வு, இந்த உரையாடல்கள் போன்ற சிறுவெளிகளில் பேசுகையில் ஏதோ ஒரு ஆசுவாசம் ஏற்படுகிறது. வெவ்வேறு புள்ளிகளில் தொடங்கி உயிர்த்துக் கொண்டிருக்கும் இயக்கங்களும், சிந்தனைகளும் பல புள்ளிகளில் இணைவதும், இந்தப் புள்ளிகளில் பின்னல்களில் சேர்ந்து சிந்திப்பதற்கான இயங்குவதற்கான சாத்தியங்கள் நிறைந்து இருப்பதையும் காணும் பொழுது நம்பிக்கையுண்டாகிறது.
குடும்பம் என்ற அமைப்பின் ஆணாதிக்க ஆதார அடித்தளமும், முதலாளித்துவக் கருத்தியலின் குறியீடாக அது இருப்பதும் எல்லா முற்போக்கு இயக்கங்களாலும் பிரச்சனைக்குள்ளாக்கப்பட்டுள்ளன. பெண்ணியவாதிகள் எல்லோரும் குடும்பங்களைத் தகர்த்தெறிய முற்படுபவர்கள் என்றொரு சித்தரிப்பு உண்டு. அதென்னவோ அவ்வளவு சுலபமான காரியம் போல! தகர்த்தல், கட்டுமானங்களை உடைத்தல் என்ற சொற்களுக்கும் அவை சார்ந்த செயல்பாடுகளுக்கும் மாற்று கற்பனைகள் அவசியம் தேவை என்று எனக்குத் தோன்றுகிறது. தகர்ப்பது உடைப்பது என்ற சொற்கள் பொதுவெளியில் சில விதமான மனக் காட்சிகளை விடுவிக்கின்றன. இந்த மனக் காட்சிகள் கொடிய வன்முறை சார்ந்தவை, ஆழ்ந்த சிந்தனையும், அன்பும், பரிவும் இல்லாத ஏதோ ஒரு பொங்கியெழுதலின் விளைவுகளை அவை சார்ந்த உணர்வுகளை மனதின் எல்லைகளில் நிறுத்துபவை.
என்னைப் பொறுத்தவரை வழக்கத்திற்கு மாறான பாலியல் உணர்வுகளையும் செயல்பாடுகளையும் கொண்டவன் என்ற நிலையிலிருந்து குடும்பம் என்ற அமைப்பையும் என் குடும்பத்தில் எனது இடத்தையும், அதன் மற்ற அங்கத்தினர்களுடனான என்னுடைய உறவுகளையும் மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்புகள் எனக்கு நிறைய கிட்டியுள்ளன.எனது ஒருபாலீர்ப்பு குறித்த எனது அறிவித்தல்கள் நல்ல முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தருணங்களிலும் உறவுகளின் பிணைப்புகளும் அன்பின் இருத்தலும் உறுதி செய்யப்பட்ட சம்யங்களிலும், ஏதோ ஒருவித்தில் இந்த மனிதர்களுடனான என்னுடைய உறவுகள் மீண்டும் புதிதாகத் தொடங்கின என்றே நினைக்கிறேன். "இதனால் ஒன்றும் மாறவில்லை. கவலை வேண்டாம். நம் உறவும் நட்பும் இருந்த வண்ணமே இருக்கும்," என்று பிறர் சொல்லிய நேரங்களில் இந்தக் கூற்றுகள் அவர்களின் உண்மையான விழைவுகளின் வெளிப்பாடுகளே எனினும் நிச்சயமாக இந்த உறவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், அவை புதுப்பிக்கப்பட்டுள்ளன என்றும், நானும் அவர்களும் ஒருவருக்கொருவர் defamiliarize ஆகியிருக்கிறோம் என்றும் நினைக்கிறேன். ஆகையால் இந்தத் தருணங்களையும் இவற்றை நிகழ்வித்த எனது பாலியல் நிலையையும் மனித உறவுகளைப் பற்றி சிந்திப்பதற்கான, மறுபரிசீலனை செய்வதற்கான, புதுப்பிப்பதற்கான சாத்தியங்களைக் கருத்தரித்திருக்கும் தருணங்களாய் நான் பார்க்கிறேன்.
இதனாலேயே, ஒருவித விளிம்புநிலை அனுபவரீதியாக, எதிர்பால்விழைவு (heterosexuality) என்பது இப்போது இயங்கிக் கொண்டிருக்கும் மனித உறவு வகைகளின் கட்டமைப்பின் மையத்தில் (எங்கும் ஊடுருவி நிற்கும் மையம்!) இருக்கிறது என்று புரிகிறது. பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள், ஒன்றும் சாதித்திராத வம்சங்களைக் கூட விருத்தி செய்ய வேண்டும் என்ற வேட்கை, நண்பர்களின் கிண்டல் கேலியான பாலியல் இச்சை சார்ந்த பேச்சுகள், இவற்றால் ஏதோ ஒரு விதத்தில் உறுதிப்படும் நண்பர் குழாம்கள், இவற்றில் பங்கேற்பதினால் அந்தச் சிறு சமூகத்தில் உறுதிப்படும் உங்களது இருப்பு, காப்பீட்டு நிறுவனங்களும் வங்கிகளும் ஏற்றுக்கொள்ளும் உறவுகள், விளம்பரங்களும் திரைப்படங்களும் காதலுக்கு வழங்கியுள்ள definition -- அவை அனைத்தும் எதிர்பால்விழைவு என்ற மையத்தால் தாங்கிப் பிடிக்கப்பட்டிருக்கின்றன. எனவே நீங்கள் மாற்றுப் பாலியல் கொண்டவராய் இருக்கும் பொழுது இந்த அமைப்புகளை, அவற்றின் எதிர்பார்ப்புகளை, நியதிகளை, அனுமானங்களை கேள்விக்குள்ளாக்குகிறீர்கள். இது வெறும் ஏற்றுக்கொள்ளல் (acceptance) குறித்த விவாதம் அல்ல. இந்தப் பெரும்பான்மைச் சமூகத்தின் மையமானவற்றை, ஆண்-பெண் உறவின் தனிப்பெரும் நிலையை, அதனின்றும் எழும் குழந்தைப் பேற்றை, குடும்பம் அமைத்தலை, அக்குடும்பத்தில் யாருடைய பணி என்னென்ன என்ற தீர்மானங்களை -- இவை அனைத்தையும் நீங்கள் கேள்விக்குள்ளாக்கும் பொழுது, இவை எனக்கு உகந்தவை அல்ல என்று நீங்கள் கூறும் பொழுது, உங்களுக்கும் இந்த அமைப்புகளுக்கும் சமூகத்திற்குமான உறவு என்ன, உரையாடல் என்ன? ஏற்றுக்கொள்ளுதல் என்பது, அது அதிகாரச் சமநிலையற்றது என்னும் பொழுதும், எப்படி நிகழ்கிறது? உங்களையும் என்னையும் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறுபவர் எந்த ஏற்றுக்கொள்ளுதலை எப்படி நடைமுறைப்படுத்துகிறார்? நம்மை அடிக்காமல் கொல்லாமல் இருப்பதன் மூலமாகவா? திருமணத்திற்கு வற்புறுத்தாமல் இருப்பதிலா? உங்களது விழைவுகளையும் உறவுகளையும் அதன் ஆழங்களையும் அங்கீகரிக்கிறேன் என்று கூறுபவர் அந்த அங்கீகரிப்பை எப்படி வெளிப்படுத்துகிறார்? கடவுளே இது என் வீட்டுப் பிரச்சினையல்லாத வரை நன்றி என்று உள்ளூரச் சிந்திக்கும் நிலையிலா? ஏற்றுக்கொள்ளல் என்று எதனை அழைக்கிறோம், அது பார்ப்பதற்கு எப்படியிருக்கும்?
இப்படிப் பல நிலைகளில் மனித உறவுகளைப் பற்றி, சமூகக் கட்டமைப்புகளைப் பற்றி இச்சை, பால்விழைவு என்ற நிலையிலிருந்து யோசிக்க முடியும். ஆனால் இந்தப் பணியில் இப்போது குறைந்தது இரு விதமான தடைகள் உண்டு.ஒன்று பாலியல் குறித்த நுட்பமான சொல்லாடல்கள் இன்று இங்கு இல்லை என்பது. இச்சை பற்றிய சொல்லாடல் யத்தனிப்புகள் மனித உரிமைகள் என்ற பரந்த வெளியிலும் எச்.ஐ.வி/ எய்ட்ஸ் பற்றிய விவாதக் களத்திலும் திராணியிழந்து விடுகின்றன. தவறாக நினைக்காதீர்கள். இந்த இரண்டுமே முக்கியமானவை தான். உரிமை மறுப்புகள் வழங்கல்கள் நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டும். எச்.ஐ.வி/ எய்ட்ஸ் மற்றும் பொதுவாக உடல் நலம், மருத்துவ பராமரிப்பு, நோய் தடுப்பு ஆகியவற்றைக் கவனிப்பதில் தாமதம் கூடாது.எனினும் விழைவு, இச்சை, உறவுகள் ஆகியவற்றுக்கு இவற்றில் இடம் மிகக்குறைவு. இவற்றிற்கென்ற வெளி வேண்டும். ஊடகங்கள் அமைத்துத் தந்திருக்கின்ற ஒரு மாற்றுவெளி கண்டிப்பாக உதவாது -- பாலியல் கிலுகிலுப்புகள், பரபரப்புகள், குற்றச்சாட்டுகள் ஆகியவை; படுக்கையறை இரகசியப் படப்பிடிப்புகள், ஒளிபரப்புகள் பொன்ற வியாபாரங்கள். எனவே ஒன்று வெளி, தளம், சொல்லாடல்கள் இல்லாமை குறித்த பிரச்சனை. இந்த இடத்தில் காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக் கூறிய ஒன்று நினைவிற்கு வருகிறது. குரல்கள், பேசுதல்கள், கேட்கப்படுதல்கள் குறித்து உரையாடுகையில் அவர் சொல்கிறார் இது உண்மையில் குரலின்மை, பேச இயலாமை குறித்த பிரச்சினையன்று; நாம் பேசுவதையும் செய்வதையும் அடையாளம் கண்டுகொள்ள ஒரு சூழல், ஒரு கட்டமைப்பு வேண்டும்; infrastructure of recognition என்று கூறுகிறார்.
இரண்டாவது, இயக்கங்கள் மற்றும் கூட்டுச் செயல்பாடுகள் குறித்த ஒன்று. உரிமை மறுப்புகள், வன்முறை நிகழ்வகள், அநீதிகள் ஆகியவை பல மறுக்க முடியாத காரணங்களுக்காகப் பிரதானமாகின்றன. உரிமை கோருதல், வேண்டுதல், பெறுதல் என்ற அதிகாரச் சமன்பாடற்ற செயல்பாட்டில் ஈடுபடுகையில் திட்டமிடுதல் முக்கியமெனப்படுகிறது. எந்த எந்த விவாதங்களை முதலில் முன்வைக்கலாம், எவற்றை இப்போது பேசினால் வேலைக்காகாது என்று பிரச்சினையிலிருந்து பிரச்சினைக்குத் தாண்டும் செயல்பாட்டு முறை. எல்லா இயக்கங்களுக்கும் உள்ள பிரச்சனை மாதிரி என்று நினைக்கிறேன். "பெண்ணுடல், உடல் அரசியல், பெண்களின் பால்விழைவுகள் பற்றியெல்லாம் பேசி எழுதி பொதுவான ஒரு கருத்துச் சூழலை உருவாக்குவதெல்லாம் திட்டவட்டமான செயல்பாடல்ல. இட ஒதுக்கீடு குறித்து பார்ப்போம். இந்தச் சட்டத்தைத் திருத்தியமைக்கும் மசோதா பற்றி பார்ப்போம்" என்பது போன்ற நிலை.
(வேறொரு சமயம் தொடர முயல்கிறேன்...)
4 comments:
excellent...keep it up! cant wait for part 2
Post a Comment